Sunday 19 February 2017

கலைந்து போகாதே என் கனவே!


எனது பார்வையில் இசைக்கான தேடல் முற்றிலும் உங்கள் தனி இசை ரசனை சார்ந்தது. உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதுதான் உங்கள் இசைக்கான அடையாளம். ஆனால் காலம் செல்லச் செல்ல அந்த ரசனை பல வடிவங்களாக  மாறிவிடுகிறது.   ஒரு இடத்தில் நீங்கள் சற்று நின்றுகொண்டு உங்களையே என் இசை எது? என்று கேட்டுக்கொள்ள நேரிடும். எந்த கோட்பாடுகளை வைத்து நான் எனக்குப் பிடித்த இசையையும், பிடிக்காத இசையையும் தீர்மானிக்கிறேன் என்ற தெளிவு அப்போது ஏற்பட்டேயாகவேண்டும். இல்லாவிட்டால் இசை என்ற பெயரில் வெளிவரும் எல்லா அபத்தங்களையும் ஆபாசங்களையும் மற்றவர்கள் சிபாரிசு செய்வதற்காக ரசிப்பது போல நடித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.








                 கலைந்து போகாதே என் கனவே!








மே மாதம், 1985.

நாம் எல்லோருக்கும் விரும்பித் திரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு காலகட்டம் இருக்கும். அது எப்போதுமே கடந்த காலத்தின் ஒரு துணுக்காகத்தான் இருக்க முடியும். எனக்கும் உண்டு. மேலே இருக்கும் இந்தப் பதிவின் அந்த முதல் வரி எனக்கானது.  The summer of '85 always melts me into memories.

மனித முயற்சியில் நாம்  போராடி நிரூபிக்கவேண்டிய பல சாத்தியமில்லாத சவால்களை ஒரு இசை எத்தனை எளிதாக காலத்தின் மீது காலடி வைத்து தன் சுவட்டை பதித்துவிட்டு செல்கிறது! ஒரே ஒரு பாடல் எத்தனை நினைவு இழைகளை உயிரூட்டி முடிந்துபோன அந்த கண நேரத்து இன்பத்தை மனதுக்குள் பிரதியெடுக்கிறது!

எண்பதுகளின் துவக்கத்திலிருந்து என் இசை தாகம் மேற்கத்திய நீரூற்றுகளில் திரவம் தேடியது.  பீட்டில்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், எல்விஸ் பிரெஸ்லி, எரிக் கிளாப்டன், லெட் செப்பலின், Pink Floyd. ஈகிள்ஸ் போன்ற மேல்தட்டு இசைக் குழுக்கள் பற்றி அப்போது எனக்கு எதுவும் தெரியாது. அதற்கான பாதைகள் எனக்கு முன் அமைக்கப்படவில்லை. எனவே எனக்கு தெரிந்த, என் வசப்பட்ட மேற்கத்திய இசையான Boney M ஒன்றே என் வானத்தில் தோன்றிய  முதல் மேற்கத்திய மேகம். அதுவும் கூட என் பள்ளி நண்பன் நான் ஆங்கிலப் படங்களை விருப்பத்துடன் பார்ப்பது கண்டு அவனாகவே என்னிடம் ஒருநாள் கொடுத்த ஒரு போனிஎம் கசெட் மூலம் உருவானது. நானாக தேடிப் போகவில்லை.



ஆனால் அதைக் கேட்ட ஒரே நொடியில் ஒரு புதிய வானம் எனக்குள் தோன்றியது. போனிஎம் படைத்த அந்த புதுவானில் அந்த அதிரும் இசை எனக்கு இறக்கைகள் அளித்துக்கொண்டேயிருந்தது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ஞாபகத்தை வரைந்து சென்றது. மொழி தாண்டிய உணர்வுகளுக்கு பரவசம் ஒன்றே இலக்கணமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் kitar என்று எழுதிய ஒரு சிறுவனுக்கு அந்த கிடார் இசையின் மின்சாரம் எப்படி புரிந்திருக்க முடியும்?

மட மடவென போனிஎம் தொகுப்புகள் எங்களது வானொலி அறையின் மேல் அடுக்கில் மஞ்சள் பூக்கள் போல பரவின. தூரங்கள் எனக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. எங்கும் செல்ல தயாராக இருந்தேன் போனிஎம் அங்கிருக்கும் என்றால்.  இதற்கிடையே  குவீன், வாம், எடி கிராண்ட், அபா, ஓசிபிஸா, போன்ற இசை குழுக்களும் எங்கள் வானொலி அறைக்கு வருகை தந்தன.

இருந்தும் போனிஎம் என் நெஞ்சத்துக்கு நெருக்கமான ஒரு இசையாக இருந்தது. நைட் பிளைட் டு வீனஸ் பாடலில் அதிரடியாக ஒலிக்கும் ட்ரம்ஸ் இசை  கொடுத்த போதையும்  பாடல் முடியும் தருவாயில் அப்படியே அந்த இசை போனிஎம் மின் மிகப் பிரபலமான ரஸ்புடின் பாடலுக்கு உருமாறும் அந்த சிலிர்ப்பான கணமும்  இன்று கூட அதே பழைய பரவசத்தை பகிர்கிறது.



மேலே குறிப்பிட்டுள்ள அந்த summer of 1985 வந்தபோது நான் பள்ளிப்பருவத்தின் இறுதிச் சுவட்டில்  இருந்தேன்.  அந்தக்  கோடையில் எங்கள் வீடு அணிந்துகொண்ட களிப்பும், உற்சாகமும், கொண்டாட்டமும், சிரிப்பலைகளும், சந்தோஷங்களும்,எளிமை கொண்ட ஏகாந்தகளும், ஆனந்தமும் என் ரத்தத்தில் இன்றுவரை நிரந்தரமாகத் தங்கியிருக்கின்றன. எனது மூளை நியூரான் அமிலங்களின் அந்த 85ஆம் ஆண்டில் கோடைக்  காலம் சிறிய சிறிய ஞாபகத் துணுக்குகளாக மிதந்து கொண்டிருக்கின்றன.

ஏறக்குறைய இருபது நாட்கள் நீடித்த அந்த வசிய கணங்கள் விட்டுச் சென்றிருக்கும் சுவடுகள் ஒன்றே சில நேரங்களில் நான் என்னைத் தொலைக்க ஏதுவான அரவணைப்பு தருபவை. அப்போது நான் கேட்ட ஒவ்வொரு பாடலின் பின்னேயும் இருந்த ஒரு இனிப்பு ஊசி இன்றும் என் உடலில் பாய்கிறது. முடிந்துபோய்விட்ட அந்தக் கோடைக்காலம் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டேயிருக்கிறது என்னுள்.

காலம் வரைந்த குடும்பச் சித்திரத்தில் இணைந்துவிட்ட  என் உறவினர்கள், நினைவுகளில் மட்டுமே பார்த்துக்கொள்ளும் என் பால்ய சிநேகிதர்கள்,  இந்த எந்திர யதார்த்தத்தில் இடமில்லாமல் அகன்று போய்விட்ட நான் வாழ விரும்பிய கனவு வாழ்க்கை என்று நான் சுவைத்த எல்லாமே இன்று முகம் மாறிப்போய்விட்ட நிலையில் அதே தீர்க்கமான அந்தப்  பழைய உலகம் ஒரு இசையின் பின்னே ஒளிந்திருக்கிறது. ஒவ்வொரு நான்கு நிமிடப் பாடலுக்குப் பின்னும் மணிக் கணக்கான நினைவுகள் அடங்கியிருக்கின்றன.

எத்தனை நேசித்தேனோ அத்தனை அதிகமாக போனிஎம் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் நிறைய நான் சந்திக்க நேர்ந்தது. அதில் முதன்மையானது அது ஒரு டிஸ்கோ இசை என்பது. அது உண்மைதான். டிஸ்கோ வகையாக இருந்தாலும் மற்ற நாலாந்திர டிஸ்கோ குழுக்களுக்கும் போனிஎம் இசைக்கும் மிகுந்த வேறுபாடு இருக்கவே செய்தது.

போனிஎம் எனது இசை வரைபடத்தில் புதிய இலக்குகளையும், சாலைகளையும் உண்டாக்கியது. நான் நகர்ந்துகொண்டேயிருந்தேன். டிஸ்கோவிலிருந்து பாப். பிறகு ராக், ஹெவி ராக், ரகே, ஜேஸ், ப்ளூஸ், சிந்த் பாப் என்று எனது தோட்டத்தில் பல தாவரங்கள் தலைகாட்டின. டெபேச்சே மோட் போன்ற இசைக் குழுக்களிடம் வந்து சேர்ந்தபோது நான் போனிஎம் இசையை டிஸ்கோ என்று முடிவுகட்டி என் ஞாபக அடுக்குகளின் கீழே தள்ளி புதைத்திருந்தேன். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன நான் கடைசியாக போனிஎம் பாடல் கேட்டு.


மேலும் கல்லூரி சேர்ந்த புதிதில் நான் போனிஎம் பாடல்கள் கேட்பதை அறிந்த நண்பர்கள் சிலர் என்னை போனிஎம் என்று அழைத்து என்னை சிறுமைப் படுத்துவதில் சிறிது பேரானந்தம் கொண்டார்கள். அவர்களது பார்வையில் போனிஎம் வெறும் பாமரர்கள் கேட்கும் இசை. "நாங்களெல்லாம் ஜார்ஜ் மைக்கல், எரிக் கிளாப்டன், மைக்கல் ஜாக்சன் கேட்கிறவங்க" என்ற பகட்டு அவர்கள் பேச்சில் எச்சிலோடு சேர்ந்து தெறிக்கும். நானோ மைக்கல் ஜேக்ஸன் ஜுரம் பரவிக்கொண்டிருந்த நேரத்தில் கூட அந்தப் பாடல்களை விரும்பியது கிடையாது. ஆனால் வேறு வகை இசைகளில் காதல் ஏற்பட, ஒரே மாதத்தில் ஆஹா, பெட் ஷாப் பாய்ஸ், சிம்ப்ளி ரெட், போலீஸ் என்று  நான் என் நிறம் மாறினேன். கல்லூரியின் இரண்டாவது வருடத்தில் மைக்கல் ஜாக்சன் விரும்பி ஒருவனிடம் மென் அட் ஒர்க் குழுவின் Be Good Johnny பற்றி கேட்டேன். "நீ போனிஎம் மட்டும்தானே கேப்பே?" என்றான் குழப்பத்துடன். ஆறு மாதம் கழித்து அவனை  நியூ ஹாஸ்டலில் பார்த்தபோது, செண்பகமே செண்பகமே என்று மாறிப்போயிருந்தான். "இன்னுமா சாக்ஸன் (அதாவது மைக்கல் ஜாக்சன் இப்போது அவனுக்கு பிடிக்காதாம்) பாட்டையெல்லாம் கேட்கிறாய்?" என்றான் இகழ்ச்சியாக. "நீயெல்லாம் நல்லா வருவடா!" என்று அவனை ஆசீர்வதித்தேன்.

மெட்றாஸ் வந்தபோது  என் இசைக் கிளைகள் The Alan Parsons Project, Supertramp, Starship, Pink Floyd,The Cars என படர்ந்து விரிந்திருந்தன.நான் ஒரு காலத்தில் போனிஎம் ரசித்துக் கேட்டேன் என்பதே எனக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. "கேட்டிருக்கேன். ஆனா அவ்வளவா பிடிக்காது" என்று பதில் சொல்லியிருக்கிறேன் போனிஎம் பற்றிய கேள்விக்கு. வளர்ந்துவிட்ட பிறகு திரும்ப அணிய விரும்பாத அரை டிராயரை போல போனிஎம் எனக்குத் தோன்றியது.

இரண்டாயிரம் ஆண்டில் வெளிவந்த மேற்கத்திய இசை என்னை கதிகலங்க அடித்தது. நிர்வாணா, பேர்ல் ஜேம், ரெட் ஹாட் சில்லி பெப்பெர்ஸ் போன்ற அப்போதைய நவீன இசைக் குழுக்கள் அதுவரை கேட்ட ராக் ஒலியை முற்றிலும் மாற்றிப்போட்டு பின்நவீனத்துவ இசைக்கு அடிகோலின. ராக் இசையின் மிக மையமான லீட் கிடாரின் ரிஃப், தனி ஆலாபனைக்கு கதைவடைத்தன. இந்த புதிய இசை குழுக்களின் பாணி  ராக் இசையை கொலை செய்தது.   என் மேற்கத்திய இசை தாகம் முடிந்துபோனது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எழுபதுகளில் basement இசையாக இருந்த பங்க் இசையே தற்போது மாடர்ன் ராக் என்ற பெயரில் வெற்றி பெற்றிருக்கிறது. கிரீன் டே போன்ற நவீன ராக் இசை குழுக்கள் எழுபதுகளில் இருந்திருந்தால் இரண்டு இசைத்தொகுப்புகள் கூட வெளிவந்திருக்காது.



ஜான் மேஜர், ஈகிள் ஐ செரி, வால்பிளாவர்ஸ் போன்றவைகள் கேட்பதற்கே அலுப்பானவை. எந்தவித மெலடியும் இல்லாமல் கவிதையை பேசியே பாடலை "பாடுவார்கள்".

இதுபோன்ற ஒரு சமயத்தில்தான் ஒரு முறை போனிஎம் இசைத்த கிறிஸ்மஸ் இசை தொகுப்பு  என் நண்பர் ஒருவருக்காக வாங்க நேர்ந்தது. என் பள்ளி நாட்களில் கேட்ட பாடல்கள் என்பதால் -அதுவும் தற்போது சி டி என்பதால் கூடுதல் ஆர்வம் வேறு-  மீண்டும் கேட்டேன். பெலிஸ் நவிடாட், மேரிஸ் பாய் சைல்ட் , லிட்டில் ட்ரம்மர் பாய்  பாடல்கள் என்னை எண்பதுகளின் கிறிஸ்மஸ் குளிர் காலங்களுக்கு கூட்டிச் சென்றன. I'll be home for Christmas பாடல் என் மனதில் ஆழத்திலிருந்த அசைவற்று உறைந்து போயிருந்த உணர்ச்சிகளின் மீது தீ வைத்தது. என் எண்ணங்கள் உருகின.



இதைத் தொடர்ந்து போன ஆண்டு ஆமேசான் மூலம் ஐந்து சிடிக்கள் கொண்ட ஒரு போனிஎம் இசை தொகுப்பு வாங்கினேன்.  Take The Heat Off Me, Love For Sale, Nightflight To Venus, Oceans Of Fantasy, Boonoonoonoos என அந்த சிடிக்கள் மின்சார துடிப்புகளாக உருமாறி பின் என் ஸ்பீக்கரின் வழியே மனித குரல்களாக வெடித்தபோது என் பள்ளி நாட்கள், என் பழைய ஒட்டு வீட்டின் ரேடியோ அறை, என் பால்யத்து நண்பர்கள், கம்மாய் தண்ணீரில் பிடித்த மீன்கள் என வண்ணத்துப் பூச்சியின் நிறங்கள் போல பலவித எண்ணங்கள் உதித்தன என் மனதில்.


இவற்றையெல்லாம் மீறிய இன்னொன்று  என்னவென்றால் அந்த இசை தற்போது எனக்கு வெறும் டிஸ்கோ ஒலியாக கேட்கவில்லை. மாறாக என் குடும்ப உறுப்பினர் போல போனிஎம் முன்புபோலவே என் நெஞ்சத்துக்கு நெருக்கமாக ஒலித்தது.  டாடி கூல் பாடலின் முதல் இசையான இடம் வலம் நகர்ந்து செல்லும் கீபோர்டு இசை, அதை தொடரும் ட்ரம் பீட் என நான் கேட்ட அனைத்தும் என்னோடு உரையாடியது.

தொடர்ச்சியாக அந்த ஐந்து இசைத்தொகுப்புகளையும் கேட்ட பிறகு எனக்குப் பிடித்த  காமிக்ஸ் கதையொன்றை படித்த மகிழ்ச்சி என் மனதில் படர்ந்தது. யோசித்துப் பார்த்தாலோ இது உண்மைதான் என்று தோன்றுகிறது.



போனிஎம் கூட ஒரு காமிக்ஸ் போலவேதான். எத்தனை உவகையான நிகழ்வுகளை நான் வாழ்ந்திருக்கிறேன் இந்த இசை ஒலித்த நாட்களில். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து டேப் ரெக்கார்டரில் பஹாமா மாமா  கேட்ட நிசப்தமான கணங்கள், பள்ளிக்கு செல்வதை தாமதமாக்கிய ரஸ்புடின் அலறல், மதர்லெஸ் சைல்ட் என்ற பாட்டின் இடையே வரும் பிலீவிங் என்ற கோரஸை என் சகோதரிகள் திலீபன் (வீட்டின் முதல் பேரன்) என்று திரித்து அந்தப் பாடலை ரசித்தது, ஹேப்பி சாங் பாடலுக்கு என் அம்மா முதற்கொண்டு சிபாரிசு செய்தது, என் நண்பன் ஒரு திடீர் நாளில் என்னிடம்,"நானும் இனிமே உன்னை மாதிரி இங்க்லிஷ் பாட்டு கேக்கப்போறேன். எத முதல்ல கேக்கலாம்?" என சீரியஸாக தீர்மானம் எடுத்து "போனிஎம் கேளு" என்ற என் கட்டளைக்கிணங்க தொடர்ந்து அரைமணி கேட்டுவிட்டு அதன் பின் அந்தப் பேச்சையே கைவிட்டது, களிம்பாடி லூனா பாடலின் இடையில் அதிரும் சிந்தசைசர் மழை இரைச்சல் கேட்டு மற்ற நண்பர்கள் "ஏண்டா நம்ம ஆளுங்க இந்த மாதிரி மியூசிக்கெல்லாம் போடமாட்டேங்கிறாங்க?" என ஆதங்கப்பட்டது......

போனிஎம் ஒரு துடிப்பான இசைதான். வெறும் பீட்டுகள் மட்டும் கொண்ட டிஸ்கோ வகையை சேர்ந்ததுதான். ஆனால் நாற்பது வருடங்கள் கழிந்த பின்னரும், அந்த இசையில் இருக்கும் ஆன்மா இன்றைய பல நவீன மேற்கத்திய இசையில் கொஞ்சமும் இல்லை. இரைச்சலும், பேச்சுமாக வெறும் ஸ்ட்ரிம்மிங் கிடார் ஓசையுமாக இன்றைய ஆங்கில ராக் இசை பரிதாபமாக முகம் சிதைந்து வருகிறது. Pink Floyd ன் Comfortably Numb போன்ற மீண்டும் தோன்றாத அபூர்வங்கள் இனி வரப்போவதில்லை.




Going Back West என்ற போனிஎம் பாடலை மீண்டும் கேட்டபோது ஒரு கேரம் போர்ட், நான்கு நண்பர்கள் என்றிருந்த   அந்த எண்பத்து ஐந்தின் கோடை கால காலை மறுபடி துளிர்த்தது. 10000 லைட் இயர்ஸ் பாடல் அடுத்து ஆரம்பித்தது. ஆயிரம் முறை கேட்ட பாடல். பாடலின் இடையே சட்டென்று விழுந்த வார்தைகள் இம்முறை தீயின் துணுக்குகளாக சுரீரென சுட்டன.

"I feel like flow  in that clock at the wall,
God how I wish that this dream would go on....."








ஆம். சில சமயங்களில் நான் விரும்பிக் கேட்பதும் இதுவேதான்.

கலைந்து போகாதே என் கனவே!